பிசினஸ் சூட்சமம்: தொழில் வேறு, குடும்பம் வேறு!

பிசினஸ் சூட்சமம்: தொழில் வேறு, குடும்பம் வேறு!
Post By : Admin Posted on 12-05-2017

ஏழாம் வகுப்பு ஜோசப்பும் நாதனும் ஒன்றாம் வகுப்பிலிருந்தே நண்பர்கள். பள்ளிக்கூடம் முடிந்து நாதனும் ஜோசப்பும் சிறிது நேரம் விளையாடிவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுப் புறப்பட்டத் தயாரானார்கள். திடீரென ஜோசப்புக்கு ஒரு யோசனை. ‘‘நாதன் நம்ம பேக்கரிக்கு போவோமா, நம்ம ரெண்டு பேரும் ஒன்னா தேன் கேக்கு சாப்பிட்டு பல மாசமாயிடுச்சு’’. நாதனுக்கு தேன் கேக்கென்றால் ரொம்ப பிடிக்கும். ‘சரி ஜோசப் போயிடுவோம்’ ஜோசப்பின் தாத்தா பிரிட்டிஷ் கலெக்டர் வீட்டில் சமையல்காரராக இருந்தவர். அந்த அனுபவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அவர்களது பேக்கரியில் கேக் வகைகள் எப்பவும் ரொம்ப பிரமாதமாக இருக்கும். பேக்கரி கடையில் ஜோசப் அப்பா சேவியர் இருந்தார். ‘‘என்ன நாதா, உன்னையப் பார்த்து ரொம்ப நாளாச்சு’’. ‘‘ஆமா மாமா, முன்னாடி உங்க தெருவிலேயே இருந்தேன். இப்போ வீடு மாறியாச்சுல்ல’’ என்று பேசிக் கொண்டிருந்தவனுக்கு இரண்டு தேன் கேக்கினை எடுத்துத் தந்தார். ‘‘இன்னும் வேணுமாப்பா?’’ என்று கேட்க, நாதன் ‘‘இது போதும் மாமா’’ என்றான். இருவரும் தேன் கேக்கை சாப்பிட்டு முடித்துவிட்டுக் கிளம்புகிற சமயத்தில் ஜோசப்பின் அப்பா தன் சட்டை பையிலிருந்து இரண்டு தேன் கேக்குக்கானப் பணத்தை கல்லாவில் போட்டார் எப்பவும் போல். அதைப் பார்த்து நாதனுக்கு ஒரே சந்தேகம். பேக்கரியோ ஜோசப் அப்பாவுக்கு சொந்தமானதுதானே? அப்புறம் ஏன் அவர் சட்டைப் பையிலிருந்து கேக்குக்கான பணத்தைக் கல்லாவில் போடுகிறார் என்று. காலங்கள் ஓடின. நாதன் இன்ஜினியரிங் முடித்து சென்னையில் வேலைக்குச் சேர்ந்தான். ஜோசப்பும் தனது அப்பாவின் மறைவுக்குப்பின் பேக்கரியை எடுத்து நடத்த ஆரம்பித்தான். ஜோசப் மற்றும் நாதனுடன் படித்த மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பள்ளி நூலகத்துக்கு ரூ.40,000 மதிப்புள்ள நூல்களைப் பரிசளிக்கும் விழாவில் கலந்துகொள்ள தத்தம் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். விழா முடிந்த கையோடு நாதன் தன் பிள்ளைகளுக்கு ஜோசப்பின் பேக்கரியைக் காட்ட ஆசைப்பட்டு காருடன் பேக்கரி சென்றார்கள். ‘ஜோசப், என் பிள்ளைங்ககிட்ட நம்ம நட்ப பத்தி அடிக்கடி சொல்லுவேன். அதுபோல நம்ம பேக்கரிய பத்தியும்’ அனைவரும் பேக்கரியினுள் அமர்ந்தனர். ‘உங்கள எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்ன சாப்பிடறீங்க’ நாதனின் குழந்தைகள் இருவரும் ஒன்றுபோல், ‘‘நீங்க எங்கப்பாவும் எப்பவும் சாப்பிடற தேன் கேக்குதான்’’. எப்போதும் போல் சந்தோசமாக எடுத்துக் கொடுத்தார். அவர்கள் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டனர். அரை மணி நேரம் பழைய நினைவுகளைப் பகிர்ந்ததும் ஜோசப்பின் வீட்டுக்கு சென்றுவிட்டு, சென்னை செல்ல தயாராகினர் நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர். ஜோசப்பும் அவரது அப்பாவை போல நாதன் குடும்பத்தினர் சாப்பிட்ட பொருளுக்கான பணத்தை தன் சட்டை பையிலிருந்து கல்லாவில் போட்டார். அதை பார்த்ததும் நாதனுக்கு ஜோசப்பின் அப்பா இதுபோல கல்லாவில் போடும்போது ஏற்பட்ட சந்தேகம் ஞாபகத்துக்கு வந்தது. என்றாலும் ஊருக்குப் புறப்படுகிற பரபரப்பில் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. சென்னை வந்தபின் சற்று ஓய்வாக இருந்த சமயத்தில் ஜோசப்புக்கு போன் செய்தார் நாதன். ‘‘ஜோசப் எனக்கொரு சந்தேகம்!’’ என்றான் நாதன். ‘‘சொல்லு, அப்படியென்ன சந்தேகம்?’’ ‘‘இல்ல, போன வாரம் என் பிள்ளைங்களுக்கும் எங்களுக்கும் கேக் கொடுத்துவிட்டு கல்லாவில பணம் போட்ட இல்ல உங்கப்பா மாதிரியே, கடை உன்னோடதுதானே அப்புறம் ஏன்?’’ ‘‘இதுதான் உன்னோட சந்தேகமா. இங்க பாரு நாதன்… தொழில் வேறு குடும்பம் வேறு’’ ‘‘ஒன்னும் புரியல ஜோசப்’’ ‘‘என்னோட பேக்கரில தேன் கேக்கோட விலை இப்ப 10 ரூபா. அந்த 10 ரூபாய்ல கேக்க செய்றதுக்கு ஆகிற செலவும் அடங்கியிருக்கு, லாபமும் அடங்கியிருக்கு. ஆனா, கேக்க வித்ததால கிடைக்கிற லாபம் மட்டும்தான் எனக்குச் சொந்தம். அது மாதிரியே மாதம் முழுவதும் பேக்கரி பொருட்கள் எல்லாத்தையும் வித்ததால கிடைக்கிற பணத்தில இருந்து கடை வாடகை, கூலி, மளிகை பாக்கி, கடைக்காக வங்கியில இருந்து வாங்கின கடன் போன்ற செலவுகளை செய்தபின் கிடைக்கிற மீதி பணம்தான் எனக்கு கிடைக்கிற லாபம். அது மட்டும்தான் எனக்கு சொந்தம். கல்லாவுல இருக்கிற எல்லாப் பணமும் இல்ல’’. ‘‘அதனாலதான் அப்பாவும் நீயும் பேக்கரி பொருள்கள இலவசமா குடும்பத்தினருக்கு கொடுத்தாலும், அதற்கான பணத்த கல்லாவில போட்றப்ப சரி, அப்ப லாபத்தக் கழிச்சிட்டு மிச்ச பணத்த கல்லாவுல போடலாம் இல்லையா’’ ‘‘அதுவும் சரிதான். ஆனா ஒரு தேன் கேக்க வித்தா கிடைக்கிற 10 ரூபாயில எவ்வளவு லாபம்ன்னு சரியா தெரியாது. குத்துமதிப்பாதானே தெரியும். அது மட்டுமில்ல, மாதத்துக்கு ஒரு தடவதான் அந்த மாத லாபத்தில இருந்து பணத்த எடுப்பேன்’’. ‘‘மாச சம்பளம் மாதிரி… மாசத்துக்கு ஒரு தடவையா?’’ ‘‘ஆமா, நான் ஒவ்வொருநாளும் எவ்வளவு விற்பனை பேக்கரில நடக்குதோ, அந்த பணத்த எல்லாம் பாங்க்கில கட்டிருவேன். அதே மாதிரி ஒரு மாசத்துக்கு ஆகிற செலவ செக் மூலம் பைசல் பண்ணிருவேன்’’. ‘‘மைதா, சீனி போன்றவை வாங்கினதுக்கான மளிகை கடை பாக்கி, கடை வாடகை, கரண்டு பில், சம்பளம், பாங்க் லோன் இது போல உள்ள செலவுகளுக்காகவா?’’ ‘‘ஆமா முடிந்த அளவு எல்லா செலவுகளையும் செக் மூலம் பைசல் பண்ணிட்டு மிச்சம் உள்ளதுதான் எனக்கு. என் கடை ஆடிட்டரும் மாதா மாதம் கணக்கினை தணிக்கை செய்து அந்த மாத லாபத்தை சொல்லிடுவார்’’. ‘‘அப்போ அந்த லாபம் எல்லாத்தையும் எடுத்துருவியா?’’ ஜோசப்பின் சிரிப்பு சத்தம் அதிகமாகவே கேட்டது. ‘‘நான் உண்மையிலே எனக்காக இதுவரை ஒரு சம்பளத்த நிர்ணயித்து அத மட்டும்தான் எடுப்பேன்; என் குடும்பத்தயே நடத்தறேன்’’ ‘‘என்னடா சொல்ற?’’ ‘‘இந்த மாத சம்பளம் ரூ.18,000 அவ்வளவுதான் அதையும் ஆடிட்டர் மாதச் செலவில் சேர்த்திடுவார்’’. ‘‘சரி இப்படி எல்லாம் செலவழிச்சபின் கிடைக்கிற லாபத்த என்ன செய்வ?’’ ‘‘பொதுவா எல்லோரும் குடும்ப செலவுக்காக லாபத்த எடுத்து செலவழிச்சிடறாங்க. ஆனா நான் அந்த தொகைய சேர்த்து வைச்சு தொழில்லயே திரும்ப திரும்ப முதலீடு செய்றேன். இப்படியெல்லாம் செஞ்சதனாலதான், ஒரு பேக்கரியை நான்கு பேக்கரியா என்னா மாத்த முடிஞ்சிருக்கு’’. ஜோசப்புக்கு இதைக் கேட்க சந்தோசமா இருந்தது. ‘‘அப்பா மறைந்ததும் எனக்கென ஒரு சம்பளம் நிர்ணயம் பண்ணி அதுக்குள்ள குடும்பத்த ஓட்றதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனா, அந்த கஷ்டத்துக்கு சமீப காலமாகத்தான் பலன் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. பல பேரு தொழில் மூலமா கிடைக்கிற லாபத்தையும் மீறி கல்லாவில இருக்கிற பணத்துக்கு கணக்குவழக்கு பார்க்காம பணத்த எடுத்து, குடும்பத்துக்காக செலவழிச்சு நஷ்டத்தில இருந்து மீளமுடியாம நொடிஞ்சு போயிடறாங்க’’. ‘‘ஆமா ஜோசப், நீ நல்லாவே கடைய மேனேஜ் பண்ணிகிட்டு இருக்க. இப்போ என்னோட சந்தேகம் தீர்ந்தது. கடை வேணும்னா உனக்கு சொந்தமானதாக இருக்கலாம். ஆனா கல்லாவில உள்ள பணம் எல்லாம் உன்னுடையது இல்ல. லாபம் மட்டுமே உனக்கு சொந்தம்’’ ‘‘ஆமாம் நாதன் நீ புரிஞ்சுக்கிறத தொழில் புரியிறவங்க புரிஞ்சுகிட்டா யாரும் அவங்களை அசைக்க முடியாது. பன்னாட்டு நிறுவனம் என்ன வேற்று கிரக நிறுவனம் வந்தாலுமே ஒன்னும் செய்ய முடியாது’. ‘ஜோசப் நீ எங்கயோ போய்ட்ட. வீட்ல எல்லோரையும் கேட்டதா சொல். போன நான் வைச்சுடறேன்’. பேச்சு முடிந்து இருவரும் ஞாயிற்றுக்கிழமையை அனுபவிக்க தொடங்கினர்.

Newsletter Subscription

Join the community that is committed to making a difference in the world we share.

Post AD